"நீயா நானா" கோபிநாத்தும் தமிங்கில ஆதிக்கமும்!

இந்திய தொலைக்காட்சிகளின் வரிசையில் இடம்பிடித்திருக்கும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழ் பேசும் மக்களிடையே மிகவும் நெருங்கிய உறைவைப் பேணி வருகின்றது என்றால் அதில் மிகையில்லை, அந்த தொலைக்காட்சியில் இடம்பெறும் "நீயா நானா", "நடந்தது என்ன" போன்ற நிகழ்ச்சிகள் பிரபல்யமானவை, இவற்றை திரு.சந்திரன் கோபிநாத் மிகவும் சிறப்பாகத் தொகுத்து வழங்கின்றார்.

இந்திய சமுதாயத் தளத்தில் நின்று மொழி, இனம், இலக்கிய மற்றும் மனோவியல் சார்ந்த யதார்தமான சுவராசிய நிகழ்ச்சியாக இவை தென்படுவதனால் தமிழ் மக்களை ஆட்கொண்டுள்ளது என்பது உண்மை.

1975 ஜூலை 4 ஆம் நாள் பிறந்த திரு.கோபிநாத் 1998 ஆம் ஆண்டு ராஜ் தொலைக்காட்சி மூலமான அறிமுகத்தைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து இன்று வரையாக "மக்கள் யார் பக்கம்", "சிகரம் தொட்ட மனிதர்கள்", எனும் வரிசையில் "நீயா நானா", "நடந்தது என்ன" என்பவை கோபிநாத்துக்கென தனி அடையாளத்தை வகுத்துக் கொடுத்துள்ளன.

சமுதாய நேர் நோக்குடன் பலத்த புரிதல்களுக்கு மத்தியில் நீண்ட தேடுதல்களை மேற்கொண்டு நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் நடத்தும் வடிவம் அபாரம். எந்தத் தலைப்பினை எடுத்துக் கொண்டாலும் பாதை சிதறுண்டு போகாமல் குறித்த இலக்குக்கு சபையை நகர்த்திச் செல்லும் பாங்கு அருமையிலும் அருமை.

இந்த அளவுக்கு பிரசித்தமான கோபிநாத் முற்றுமுழுதான தமிழ்மொழி நிகழ்சியை இன்னும் நடாத்தவில்லையென்பது கவலையைத் தோற்றுவிக்கின்றது, கோபிநாத்தின் நிகழ்ச்சிகளில் எங்கு பார்த்தாலும் ஆங்கில மொழித் திணிப்பு அதிகம் ஆதிக்கம் செலுத்துவதைக் காண முடிகின்றது.

2007 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்த "தெருவெல்லாம் தேவதைகள்" எனும் நூலும், உங்கள் அகம் புறம் இரண்டையும் அணு அணுவாக நீங்களே ரசியுங்கள் காதலியுங்கள் முதலில் நீங்கள் உங்களைக் கௌரவமாகப் பாருங்கள் ஆராதியுங்கள் இந்த உலகம் உங்களை எப்படி பார்க்கிறது என்பதன் ஆரம்ப புள்ளி உங்களிடம் இருந்துதான் தொடங்குகிறது என்று தனி மனித சுய கம்பீர விளக்கத்துடன் பிரசுரமாகியுள்ள "ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!" எனும் நூலும்
ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த "நீயும் நானும்" எனும் தொடர் இளைஞர்களை அதிகம் ஈர்த்தது, இதன் ஒவ்வொரு கட்டுரைகளும், மிகுந்த அக்கறையோடு, சமூகப் பிரச்னைகளை எடுத்துக்கொண்டு அழகாகவும் ஆழமாகவும் அலசப்பட்டிருக்கின்றது. சில கட்டுரைகள் தன்னம்பிக்கையை விதைக்கின்றன. சில, சீரிய பண்புகளை மனதில் பதிக்கின்றன. சில போராட்ட குணத்தை வளர்க்கின்றன, வெற்றி அடைய வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்துகின்றன. இருந்தாலும் ஒட்டு மொத்தமாக கட்டுரைகளைப் படிக்கும்போது, இது வெறும் சுயமுன்னேற்றப் புத்தகம் என்று கூறிவிட முடியாத அளவுக்கு சமூக தாக்கம் மேலிட எழுதப்பட்டு இருக்கிறது, இவையே கோபிநாத்தின் தமிழ் எழுத்துத் தளத்தினை வாசகர்களுக்குப் பரீட்சயமாக்கியது.






"எதிர்கால இந்தியா" சார்ந்து திரு.ச.கோபிநாத் நடாத்தும் கருத்தரங்குகள் அளப்பரிய விடயங்களை காத்திரமாக மக்களுக்கு எடுத்துக் கூறுகின்றன, இவற்றுக்கும் மேலாக அயல்நாடுகளுக்குச் சென்று நீயா நானா வடிவில் கோபிநாத் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார், அவற்றில் "குழந்தைகளை வளர்ப்பதற்குச் சிறந்தது அமெரிக்கச் சமுதாயமா அல்லது இந்திய சமுதாயமா", அமெரிக்கா வந்த பின் மாறியிருப்பது ஆண்களா அல்லது பெண்களா போன்ற அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் வர்ணிக்கத்தக்கவை.

இவ்வளவு பிரபல்யமான கர்வம்மிக்க மனிதரான கோபிநாத் தனித் தமிழில் நிகழ்ச்சிகளை நடாத்த வேண்டுமென நினைக்காதிருப்பது வேதனையாக இருக்கின்றது, தமிழகத்தை ஆட்கொள்ளவிருந்த ஹிந்தி மொழியையைத் துரத்துவதற்காக உள் நுழைந்த ஆங்கிலம், இன்று தமிழ்மொழியைத் துரத்த எத்தனம் பண்ணிக் கொண்டிருக்கின்றது, இதன் முன்னோட்டமே தமிழகத்தில் பேசப்படும் தமிங்கிலமாகும். இந் நிலை தொடருமாகில்,
தேடிச் சோறு நிதம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ? எனும் பாரதி பாடலும் கூடவே தமிழையும் தேடவேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.

மேலதிக தேடலுக்கு http://www.tedxtirupur.com/blog/2011/03/neeya-naana-gopinath/



வெளிடப்பட்ட தளத்தின் விவரம்
இந்த பதிவை எழுதியது -  Kalamm
தளத்தின் பெயர் - http://kalamm.blogspot.com