‘குழந்தைகளை எப்படி வளர்ப்பது?’ என்பது பற்றி நடிகர் சிவகுமார்.
உயர்ந்த பண்புகளுடனும் நெறிசார்ந்த செயற்பாடுகளுடனும் தமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர் நடிகர் சிவகுமார். அவரது வாழ்வியல் முறைகளால் மட்டுமின்றி தமது பிள்ளைகளான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரின் செயற்பாடுகளாலும் கவனிக்கத் தகுந்த மனிதராகவும், நல்லதொரு தந்தையாகவும் விளங்கிவருகிறார் அவர். அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி ; “கண்டித்தாலும் தவறு..கண்டுக்காமல் விட்டாலும் தவறு. எப்படி ஐயா குழந்தைகளை வளர்ப்பது?”
அவரது பதில் இங்கே;
“ இனவிருத்தி செய்வதோடு பூச்சிகள், பறவைகள், விலங்குகள் கடமை முடிந்துவிடுகிறது. ஆடு மாடு போன்றவை கொஞ்ச நாட்கள்தாம் குட்டிக்கு-கன்றுக்கு பால் கொடுக்கும். பறவைகள் இரை தேடி எடுத்துவந்து குஞ்சுகளுக்கு சிறகு முளைக்கும்வரை ஊட்டிவிடும். அதன் பிறகு அதது தன் வாழ்வை வாழ்ந்துகொள்ள வேண்டியதுதான்.
ஆறறிவு படைத்த மனிதன் குழந்தையைப் பெற்றுப் போட்டுவிட்டு ஓடிவிட முடியாது. உடல் இன்பத்தின் நீட்சியாக குழந்தைப் பிறந்தது என்ற மனோபாவத்திலிருந்து உயர்ந்து நம் வம்சத்தை விருத்தி செய்ய, தன் பாரம்பரியப் பெருமைகளைத் தூக்கி நிறுத்த, தான் பெறாத சுகத்தை, தான் கற்க முடியாத கல்வியை, தான் அடைய முடியாத புகழை-செல்வத்தைத் தன் வாரிசுகள் பெற்று, பெற்றோர்க்குப் பெருமை சேர்க்கும் பிள்ளைகளாக அவை வருங்காலத்தில் உருவாக வேண்டும் என்ற எண்ணத்துடன் குழந்தைப் பெற்றுக்கொள்வது நல்லது.
நூற்றுக்குப் பத்துப்பேர்கூட அப்படிப்பட்ட சிந்தனையுடன் குழந்தைப் பெற்றுக்கொள்கிறார்களா என்பது சந்தேகமே!
கல்யாணம் நடந்தது, முதல் இரவு முடிந்தது, உடல் சேர்க்கை நிகழ்ந்தது-அதன் விளைவாக ஒரு ஜீவன் பிறந்துவிட்டது. என்ன செய்வது, பெற்றுத் தொலைத்துவிட்டோம். பிறகு வளர்த்துத்தானே ஆகவேண்டும் என்ற அலுப்பு, சலிப்பு பெற்றோர்களுக்கு-குறிப்பாகப் பெற்றவளுக்கு ஏற்பட்டுவிட்டால், அந்தப் பிள்ளை பிறவியிலேயே சபிக்கப்பட்ட பிள்ளைதான்.
ஆறு மாதம்கூட முழுசாகத் தாய்ப்பால் தராமல், தனக்குத் தூக்கம் கெடுகிறது; அழகு குலைகிறது; உடல் சோர்ந்து விடுகிறது; பிரமோஷன் தாமதப்படுகிறது என்பதற்காக அந்தப் பச்சைக்குழந்தையை அள்ளி எடுத்துப்போய் ‘க்ரீச்’ என்ற குழந்தைக் காப்பகத்தில் ஆயாக்களிடம் ஒப்படைத்து, ‘செரிலாக்’ என்கிற பால்பவுடர், அல்லது புட்டிப்பால் தந்துவிட்டு அலுவலகம் ஓடுகின்ற பெருமைக்குரிய தாய்மார்கள் நிறையப்பேரைப் பார்க்கிறோம்.
அடுத்த ஆறுமாதத்தில் ஆயாக்கள் புஷ்டியாக உடம்பு தேறி வர, குழந்தைகள் சோமாலியா நாட்டு ஊட்டச்சத்தற்ற, எலும்பின்மீது தோல் போர்த்தப்பட்ட குழந்தைகளாக இளைத்துப்போகும் கொடுமைகள் நடக்கின்றது.
ஓராண்டுகூட அந்தப் பச்சைக்குழந்தையை நெஞ்சோடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டுக் கொஞ்சி பாலூட்டி வளர்க்க முடியாதவர்கள் அந்தக் குழந்தையின் அடிப்படை உரிமைகளை மறுக்கிறவர்களாகிறார்கள்.
குழந்தை பசிக்கு அழுகிறதா, தொடையில் எறும்பு கடித்ததால் அழுகிறதா, வயிற்று வலியால் அழுகிறதா, காது வலி எடுத்து அழுகிறதா, மூக்கடைப்பால் அழுகிறதா, எதற்கு அழுகிறது என்பது பெற்ற தாய்க்கும்-அந்தக் குழந்தையைப் பெற்ற தாய்க்குத்தான் எளிதாகப் புரியுமே தவிர, நாற்பது குழந்தைகளுக்கு நடுவில் நாதியற்று, வெயிலில் காய்ந்து, வாய் வறண்டு ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் ‘டயாஃபர்’ என்ற கோவணம் போன்ற உள்ளாடையில் போய், அது வறண்டு சீந்துவாரற்றுக் கிடக்கும் சூழலில் அக்குழந்தைகளை கவனிக்கும் ஆயாக்களுக்குப் புரியாது.
தாயின் மடியில் படுத்துக்கொண்டு அவள் இடது கை முழங்கை மடிப்பில் தலை வைத்து இடது மார்பில் குழந்தைக்குப் பாலூட்டும்போது உச்சி முகர்ந்து முத்தமிட்டு தாய் கொஞ்சும்போது- உலகில் அதற்கிணையான பரவசத்தை, பாதுகாப்பு உணர்வை, குழந்தை எங்கும் எப்போதும் பெறமுடியாது.
தேவதை ஒருத்தி பூமிக்குவந்து குழந்தையைத் தூக்கி எடுத்துக் கொஞ்சினாலும், தாய் கைப்பட்ட அடுத்த விநாடிதான் குழந்தையின் அழுகை நிற்கும். ஒருமாத குழந்தைக்கூட தாயின் கரங்களில் உள்ள உஷ்ணத்தை இனம் கண்டு பாதுகாப்பை உணர்ந்துகொள்ளும்.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வருடமும் குழந்தையின் உடம்பு மட்டுமல்ல மூளையும், அறிவும், அறிதலும் வளர்ந்துகொண்டே இருக்கும்.
தவறான நிகழ்வுகளோ கண்டிப்பான வார்த்தைகளோ எதுவாயினும் மனத்திரையில் எளிதாகப் பதிவாகிவிடும்.
கணவன் மனைவி தங்களின் குழந்தை முன்பு வாக்குவாதம் செய்வது, வேலைக்காரர்களை குழந்தை முன்பு கடுஞ்சொல்லால் திட்டுவது-எல்லாம் அழிக்கமுடியாத பதிவுகளாகிவிடும்.
குடும்பத்தலைவன் நான், நான் புகைப்பிடிக்கலாம், மது அருந்தலாம் ஆனால் குழந்தைகள் அதைக் கண்டுகொள்ளக்கூடாது என்று வறட்டுவாதம் பிடிக்கக் கூடாது. திருமணத்திற்கு முன்பு எல்லைதாண்டி பல தவறுகள் செய்திருந்தாலும் குழந்தைகள் வளரும்போது பெற்றோர் அவர்களுக்கு ‘ரோல்மாடல்களாக’ இருக்கவேண்டும்.
அப்பாவுடைய குணமும் ஆற்றலும், அம்மாவுடைய பொறுமையும் கனிவும், குழந்தைகளை ரொம்பவே கவரும்.
அப்பா தவறு செய்திருந்தாலும், அம்மா தவறுசெய்திருந்தாலும் குழந்தைகளிடம் ‘சாரி’ சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும். அதைப்பார்க்கும் குழந்தைகள், தவறு செய்தால் மறைக்கவேண்டிய அவசியமில்லை-அதை உணர்ந்து மன்னிப்புக்கேட்பது நல்லது என்று புரிந்துகொள்ளும்.
குழந்தகள் ரொம்பவும் ‘பொஸஸிவ்’ ஆக, அனைத்தும் தனக்கே சொந்தமானதாக இருக்கவேண்டுமென்று நினைப்பார்கள்.
‘தீர்ப்புகள் திருத்தப்படலாம்’ என்ற படத்தில் என் மகளாக மீனா நடிப்பார். உடல்நலமின்றி தாய் மருத்துவமனையில் இருக்க அந்தக் குழந்தைக்கு டைனிங்டேபிளின் அடியில் அமர்ந்து நான் சோறு ஊட்டிவிடுவேன். முதுகில் சுமந்தவாறு மாடிக்குத் தூக்கிச் செல்வேன். மார்புமேல் படுக்கவைத்து தட்டிக்கொடுத்து தூங்கவைப்பேன்.
என் மகள் பிருந்தாவுக்கு அப்போது மூன்றுவயது. படத்தைப் பார்த்த குழந்தை வீட்டுக்குவந்ததும் ஒரு கேள்வி கேட்டாள். “அப்பா, நீங்க என்அப்பாவா? மீனாவோட அப்பாவா? அவளுக்கு மட்டும் சோறு ஊட்டிவிட்டீங்க. உப்புமூட்டைச் சுமந்தீங்க, நெஞ்சுமேலே படுக்கவச்சு தூங்கவச்சீங்க, நான்தானே உங்கபொண்ணு..அதெல்லாம் இப்ப எனக்கும் பண்ணுங்க” என்றாள்.
வாயே திறக்காமல் டைனிங்டேபிள் அடியில் நுழைந்து அவளுக்கு சாதம் ஊட்டிவிட்டேன். மாடியிலுள்ள படுக்கை அறைக்கு முதுகில் தூக்கிப்போனேன். படுக்கையில் மல்லாந்து படுத்து மார்மீது அவளைப் படுக்கவைத்துக்கொண்டேன். போதாததற்கு, ஜெயச்சந்திரன் அப்படத்தில் எனக்காகப் பாடிய பாடலை என் கட்டைக்குரலில் பாடி தூங்கவைத்தேன்.
ஆங்கிலேயர் கலாச்சாரம் வேறு; தமிழ் மக்களின் கலாச்சாரம் வேறு. அவர்கள் குழந்தைப்பெற்றவுடனேயே ஆயாக்களிடம் கொடுத்து பக்கத்து அறையில் பச்சைக்குழந்தையைத் தூங்கப் பழக்கிவிடுவார்கள். பசியில், நடுநிசியில் குழந்தை அழுதாலும் பால்தர தாய் போகமாட்டாள்.
மருத்துவரிடம் கேட்டால் அந்த மேதை, “அதை அப்படியே விட்டுவிடுங்கள். பசியில் அழுது ஓய்ந்து பழகிக்கொள்ளும். நீங்கள் போய்ப் பால்கொடுத்தால் இரண்டு மணிக்கு ஒருதரம் அது எழுந்து அழும். இரவில் உங்கள் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு மூன்றுமுறை போய் பால்தர வேண்டும். வேண்டாம். விட்டுவிடுங்கள். பசியில் அழுது சோர்ந்து தூங்கிவிடும். ஒன்றும் ஆகாது” என்று கூறுவார்.
இங்கு நம் மண்ணில் குழந்தைக்கு ஒரு வயது ஆகும்வரையிலாவது குழந்தை இரவில் பசியால் அழும்போது தாய் எழுந்து பால்கொடுக்கும் பழக்கம் இருக்கிறது. ஆரோக்கியமான பழக்கம்.
தொழிலதிபர்கள் மற்றும் பணக்காரர்கள் தங்கள் குழந்தை ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல் போர்டிங் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்று சொல்வதை கௌரவமாகவும் பெருமையாகவும் நினைக்கிறார்கள்.
குழந்தைகளுக்குத் தன் வேலைகளைத் தானே செய்துகொள்ளவும், சுயமாக முடிவெடுக்கவும் ஹாஸ்டல் வாழ்க்கை-அந்தக் கான்வெண்ட் பள்ளிவாழ்க்கை கற்றுத்தருகிறது என்பது உண்மைதான். அதற்கு நீங்கள் குறைந்தது குழந்தைக்கு பத்துவயது தாண்டியதும்தான் அனுப்பவேண்டும்.
மூன்றுவயது, நான்குவயது சிறுவர்களை-சிறுமிகளை, பிளேட்டில் போட்ட சாதத்தைக் கையால் எடுத்துச் சாப்பிடத் தெரியாத வயதில், ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் போய்விட்டுக் கழுவத்தெரியாத வயதில், தன் டிராயர் பட்டனைத் தானே போடத்தெரியாத- கழுத்துவழி சட்டை மாட்டிக்கொள்ளத் தெரியாத வயதில், போர்டிங் ஸ்கூலில் போடும் கொடுமையைச் செய்யாதீர்கள்.
நடுங்கி உடல் விறைக்கும் 5 டிகிரி குளிரில் ரத்த ஓட்டமே குறைந்துவிடும். மட்டன் சிக்கன் 2 மணிநேரம் அடுப்பில் வைத்தாலும் வேகாது. அடிப்பக்கம் உஷ்ணம், மேல்பகுதியில் கடும்குளிர் படுவதால் குழம்பு சீக்கிரம் கொதிக்காது.
மாலை 6 மணிக்கெல்லாம் இரவு சப்பாத்தி-குருமா குழந்தைகளுக்கு பரிமாறப்படும். ஆயிரம் குழந்தைகளுக்கு சப்பாத்தி தயாரிக்க பிற்பகல் 2 மணிக்கே சமையல் அறை பரபரப்பாகிவிடும். 4000 சப்பாத்திகள் சுட்டு அடுக்கி வைத்திருப்பார்கள். பிளேட்டிலே அவை விழும்போது விறைத்து குளிர்ந்து நாய்த்தோலைவிட கெட்டியாக இருக்கும். விவரம் தெரிந்த குழந்தைகள் குருமாவில் சப்பாத்தியை ஊறப்போட்டு பிய்த்துச் சாப்பிடும். அப்பாவிக் குழந்தைகள் அந்தச் சப்பாத்தியைப் பிய்க்க நாய் படாத பாடுபடும்.
ஒருவழியாக சாப்பிட்டு பிளேட் அலம்பிவைத்து 50, 100 பேர் படுக்கும் நீண்ட ஹாலில் கருங்கம்பளிக்குள் நுழைந்து சுருண்டு படுத்துக்கொள்ளும்.
இரவு 9.30மணிக்கு குழந்தைக்குப் பசி எடுக்கும். யாரிடமும் எதுவும் கேட்க முடியாது. பொதுவாக ஒரு வகுப்பில் 25, 30 குழந்தைகள் படிக்கும்போது பாடங்களில் ஏற்படும் சந்தேகத்தைத் தீர்க்கவே ஆசிரியருக்கு நேரம் போதாது. இந்த அழகில் இரவு பசி எடுத்ததையோ, வயிற்றுவலி வந்ததையோ, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையோ ஆசிரியரிடம் சொல்ல குழந்தை அஞ்சும், அவமானப்படும். இரவும் பகலும் ஊமை அழுகையாக அழுது ஆறுமாதப் படிப்பு முடியும்.
அம்மா வந்து ஆறுவயது மகனை அள்ளி எடுத்து வீட்டுக்கு அழைத்துப்போவாள். அந்த ஒரு மாத விடுமுறையில் அக்குழந்தைக்கு ராஜ உபசாரம். வடை பாயாசமென்ன, புத்தாடைகள் என்ன, கார் ரெயில் பொம்மைகள் என்ன, பிளாக் தண்டர் ரிசார்ட்டில் ஜெயண்ட் வீல், ரோலர் கோஸ்டர் ரயில் சவாரி, துப்பாக்கிச் சுடுதல், குதிரை சவாரி- என்று பூலோக சொர்க்கத்தைக் காட்டுவாள் அம்மா.
விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிசென்று அந்த சிறைக்கம்பிகளுக்கு ஒப்பான இரும்புக்கதவைத் திறந்து உள்ளே மகனை அல்லது மகளை அனுப்பி அம்மா ‘டாட்டா’ சொல்லும்போது நெஞ்சமெல்லாம் குமுறி கோபத்தின் உச்சத்தில் ‘உன்னைக் கொலை செய்யப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் அந்த ஆறு வயதுச் சிறுவன்/சிறுமி செல்வான்.....என்ன வலி இருக்கவேண்டும்-எப்படிப்பட்ட வேதனை அக்குழந்தைக்கு இருந்தால் அந்த வார்த்தையை அம்மாவைப் பார்த்துச் சொல்வான்..........! இந்தப் பாவத்தை 10 வயதாகும்வரை குழந்தைகளுக்குச் செய்யாதீர்கள்.
எங்கள் வீட்டில் உறவுக்காரக்குழந்தைகள், வீட்டுக்குழந்தைகள் என்று விடுமுறை நாட்களில் வீடே அல்லோலகல்லோலப்படும். ஒரு நாள் பிள்ளைகளின் அறையில் ஒரு பீரோ டிராயரை துணைவி திறந்து பார்த்தபோது பிளேபாய் பத்திரிகையில் வெளியாகும் அழகிய பெண்களின் நிர்வாணப்படங்கள் சில கிடந்தன. பதறிப்போனவர் என்னிடம் வந்து ‘இது யார் வேலை தெரியவில்லை’ என்றார்.
நான் சிரித்துக்கொண்டே சொன்னேன். “அவர்கள் ஒன்றிரண்டுதான் வைத்திருக்கிறார்கள். நான் பதினாறு வயதிலேயே வாத்சாயனம் கொக்கோக சாஸ்திரம் எல்லாம் படித்திருக்கிறேன். இதை நான் பார்த்துக்கொள்கிறேன் போ” என்றேன்.
ஐந்தாறு பிள்ளைகள். எல்லோருக்கும் 14 வயது முதல் 18-க்குள் இருக்கும். என் மகனிடம் “ஓவிய அலமாரிக்குச் சென்று இரண்டு ஸ்கெட்ச் நோட்டுக்கள் எடுத்து வா” என்றேன். குறிப்பிட்ட அந்த நோட்டில் ஓவியக் கல்லூரியில் பெண்களை- பெண்களின் உடலமைப்புகளை- பல கோணங்களில் நிர்வாணமாக வரைந்த ஸ்கெட்ச்கள் தீட்டப்பட்டு இருந்தன.
பிள்ளைகளை அழைத்து ஒவ்வொரு உறுப்பாகக் குறிப்பிட்டுக்காட்டி “இது மார்பகம் குழந்தைகள் பிறந்ததும் பால்சுரக்கும் பகுதி. இதில்தான் நீங்கள் பால் ஊட்டப்பட்டீர்கள். வயிற்றின் கீழ்ப்பகுதியில் தொப்புளுக்குக் கீழே சுருக்கங்கள் தெரிகிறதா? இது குழந்தைகள் அம்மா வயிற்றுக்குள் வளரும்போது வயிறு பெரிதாவதால் ஏற்படுபவை.
குழந்தை பிறந்துவிட்டபின் ஊதிய வயிறு சுருங்கும்போது- காற்றடைத்த பலூனிலிருந்து காற்று வெளியேறிவிட்டால் பலூன் எப்படிச் சுருங்கிவிடுகிறதோ அப்படி வயிறு சுருங்கியுள்ளது.
அதற்குக் கீழே உள்ளது பிறப்புறுப்பு. இதன் வழியாகத்தான் நீங்கள் பிறந்தீர்கள். காக்கா கொண்டாந்து போட்டுட்டுப்போச்சு, தவிட்டுக்கு உன்னை வாங்கிட்டு வந்தேன்-என்று அம்மாக்கள் சிறுவயதில் சொல்வதெல்லாம் உண்மையில்லை” என்று தெளிவுபடுத்தினேன்.
மறுநாள் அந்த டிராயருக்குள் இருந்த பிளேபாய் படங்கள் காணாமல் போய்விட்டன.
பிள்ளைகளுக்கு சிலிர்ப்பூட்டுகிற, கிரக்கத்தை ஏற்படுத்துகிற, மர்மமாகத்தோன்றுகிற, விடைகாண முடியாமல் தவிக்கிற டீன்ஏஜ் பிரச்சினைகளை வெளிப்படையாக நீங்கள் பேசி சந்தேகத்தைத் தீர்த்துவிட வேண்டும்.
தோளுக்குமேல் வளர்ந்த பிள்ளை உன் தோழன்தான். எதையும் மறைக்காமல், மறுக்காமல் பிள்ளைகளோடு விவாதியுங்கள்.
தனித்தனியே என் பிள்ளைகளுக்கு அறைகள் இருந்தபோதிலும் கல்லூரி செல்லும் வரையில்கூட ஒரே படுக்கை அறையில்தான் குழந்தைகள் எங்களோடு தூங்கினார்கள்.
கணவன் மனைவிக்கு ‘பிரைவஸி’ வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். அதை நாங்கள் பெரிதாகக் கருதாமல் குழந்தைகளின் விருப்பப்படியே உடன் தூங்கினோம்.
குறிப்பாகப் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்தபின் தனி அறையில் தூங்கவிடாதீர்கள். பாட்டியுடனோ ஆயாவுடனோ அம்மாவுடனோ குழந்தை தூங்குவது வேண்டாத சிந்தனைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றும்.
பள்ளிக்கூடத்தில் பல் இளித்தவன், பஸ் ஸ்டேண்டில் டாட்டா சொன்னவன், ஆண்டு விழா மேடைகளில் ஆடிப்பாடியவன் இப்படி எவனாவது ஒருவன் பட்டாம்பூச்சியாய் அந்தப் பெண் மனதில் சிறகடித்து தூக்கத்தைக் கெடுப்பான். இப்போது எஸ்எம்எஸ் என்று ஒரு எமன். இப்படி ரகசியமாக அந்தரங்கமாக பட்டாம்பூச்சி பையனை நினைத்து கனவு காண்பதைத் தடுக்க ஒரே வழி அம்மாவுடனோ பாட்டியுடனோ குழந்தை தூங்குவதுதான்.
திருமணத்துக்கு ஆறுமாதம்வரை எங்கள் மகள் எங்களோடுதான் தூங்கினாள்.
இணைய தளம் என்கிற இன்டர்நெட் வலைத்தளம் இன்னொரு போதையான சமாச்சாரம். நல்லது கெட்டது எல்லாம் வெட்டவெளிச்சமாக, மூஞ்சியில் அடித்தாற்போல மனதைப் பாதிக்கின்றன.
கம்ப்யூட்டரை வீட்டு நடு ஹாலில் வைத்துவிடுவது ஒன்றுதான் சிறந்த வழி. தவறான எண்ணத்துடன் தப்பான காட்சிகளை ஹாலில் உட்கார்ந்து எந்தப் பிள்ளையும் பார்க்கமுடியாது.
‘நான்தான் டாக்டருக்குப் படிக்கலே. நீயாவது படி. நம்ம வீட்ல எஞ்சினியர் இருக்கார்,வக்கீல் இருக்கார். எப்படியும் நீ டாக்டராக வேண்டும்’ என்று உங்கள் விருப்பங்களை- அபிலாஷைகளை உங்கள் பிள்ளைகள் மீது திணிக்காதீர்கள். அவர்களுக்கு எந்தத் துறையில் விருப்பமோ அந்தத் துறையில் படிக்க அனுமதியுங்கள்.
சூலூர் பள்ளியில் ஐந்தாவது ஆறாவது ரேங்க் படிப்பில் வாங்கிய நான் சென்னைக்கு ஓவியக்கலை படிக்க புறப்பட்டபோது படிப்பறிவில்லாத என் தாய் ‘உன் விருப்பம் எதுவோ அதைச் செய். என்னால் முடிஞ்சவரைக்கும் பாடுபட்டு பணம் அனுப்புகிறேன்’ என்று தைரியமூட்டி அனுப்பினார்
இன்று நான் வரைந்த காந்திஜி, நேரில் சென்று எட்டுமணி நேரம் வரைந்த தஞ்சை பெரிய கோவில், திருவண்ணாமலை கோபுரங்கள், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் போன்ற எண்ணற்ற ஓவியங்களை ‘அந்தளவுக்கு உயர்தரத்தில் இருபத்து நான்கு வயதில் வரைந்தவர்கள் இந்திய அளவில் இருபது பேர் கூட இருக்கமாட்டார்கள்’ என்றார் என் ஓவிய ஆசிரியர்.
லயோலா கல்லூரியில் பி.காம் படிக்கும்போது மூன்று பாடங்களில் அரியர்ஸ் வைத்து தடுமாறி பின்னர் தேர்ச்சி பெற்ற சூர்யா, திரையுலகில் முன்னணிக் கதாநாயகனாக முத்திரை பதிக்க முடிந்திருக்கிறது.
பிள்ளைகளின் தனித்திறமை பார்த்து அவர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்குவியுங்கள்.
பணம் சம்பாதிக்கும் மெஷினாக உங்கள் பிள்ளையை உருவாக்கி பெருமைப் படாதீர்கள். அதிகாலைச் சூரியன், தேன் உறிஞ்சும் வண்ணத்துப் பூச்சிகள், குழந்தைகளின் மழலைகள், கோபுரங்களின் அழகு, நதியின் பிரவாகம், நண்பர்களின் அரட்டை, பெற்றோரின் பாசம், இசையின் அருமை, ஏழைக்கு உதவுதல், உள்ளிட்ட வாழ்க்கையின் உன்னதங்களை உங்கள் பிள்ளைகள் அனுபவிக்க கற்றுக்கொடுங்கள்.
பிள்ளைகளின் எதிர்காலம், அவர்களின் நல்வாழ்வு, அவர்கள் பெறும் வெற்றி- இவைதாம் பெற்றோரை கடைசி மூச்சுவரை நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வைத்திருக்கும்.